கொலை வழக்கில் கைதான கொத்தனார் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கழுகுமலையில் பெட்டிக்கடைக்காரரை கொலை செய்த கொத்தனார் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கழுகுமலை,
கழுகுமலையில் பெட்டிக்கடைக்காரரை கொலை செய்த கொத்தனார் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
பெட்டிக்கடைக்காரர் வெட்டிக் கொலை
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கே.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் அழகய்யா மகன் அழகுராஜ் (வயது 35). பெட்டிக்கடைக்காரரான இவர் கடந்த மாதம் 20–ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் கழுமலை பஜாரில் சென்று, பெட்டிக்கடைக்கு தேவையான பொருட்களை வாங்கினார்.
அப்போது அங்கு வந்த கரட்டுமலையைச் பொன்ராஜ் மகன் கொத்தனார் மகேந்திரன் (27) அரிவாளால் அழகுராஜை வெட்டிக்கொலை செய்தார். பின்னர் கழுகுமலை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த மகேந்திரனை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், கைதான மகேந்திரனுக்கும், கே.ஆலங்குளத்தில் கணவரை பிரிந்து தனியாக வசிக்கும் பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததும், இதனைக் கண்டித்த அழகுராஜை மகேந்திரன் வெட்டிக் கொலை செய்ததும் தெரிய வந்தது.
குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
இதற்கிடையே மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு, கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மூலமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் பரிந்துரையின்பேரில், மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள மகேந்திரனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story