கொரோனா வைரஸ் எதிரொலி: கோவை ஓட்டல்களில் தங்கும் வெளிநாட்டினர் விவரம் சேகரிப்பு - அதிகாரிகள் தகவல்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கோவை ஓட்டல்களில் தங்கும் வெளிநாட்டினர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதிக்கு பின்னர் சீனாவிற்கு சென்று விட்டு திரும்பியவர்கள், சீனா வழியாக இந்தியா திரும்பியவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் 28 நாட்களுக்கு பொதுவெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் 24 பேர் பொது வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் ஜப்பானில் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொண்ட மாணவர் ஒருவர் சிங்கப்பூர் வழியாக கோவை வந்தார். அவருக்கு காய்ச்சல் மற்றும் தொண்டையில் வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவரை டாக்டர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரிடம் இருந்து பெறப்பட்ட சளி மாதிரி, சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதன் பரிசோதனை முடிவு இன்று (வியாழக்கிழமை) தெரியவரும். அதுவரை அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- சீனா, ஈரான், இத்தாலி, ஜப்பான் உள்பட 14 நாடுகளை சேர்ந்த பயணிகள் மற்றும் அந்த நாடுகள் வழியாக இந்தியா வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். கோவையில் ஆயுர்வேத மையங்கள் அதிகளவில் உள்ளன. இந்த மையங்களில் தமிழகம் மட்டுமின்றி பிற நாடுகளை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெறுகின்றனர்.
எனவே இந்த ஆயுர்வேத மையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வெளிநாட்டினர், கோவையில் உள்ள ஓட்டல்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் யாராவது கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து வந்திருந்தாலோ அல்லது அந்த நாடுகள் வழியாக பயணம் செய்து இங்கு வந்திருப்பது தெரியவந்தால் அவர்களை 28 நாட்களுக்கு கண்காணிப்பில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
கோவை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே பொதுமக்கள் கொரோனா குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்த மாணவருக்கு இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட வில்லை. எனவே பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story