திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரம்மோற்சவம்; 45 அடி உயர மெட்ரோ ரெயில் தூண்களுக்கு நடுவே நாளை தேரோட்டம்
திருவொற்றியூர் வடிவுடைம்மன் கோவில் மாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 45 அடி உயர மெட்ரோ ரெயில் தூண்களுக்கு நடுவே நாளை தேரோட்டம் நடக்கிறது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பிரசித்திபெற்ற இந்த கோவிலின் மாசி பிரம்மோற்சவ விழா 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்திரசேகரர் திருத்தேர் உற்சவம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிமுதல் 9மணிக்குள் புறப்படுகிறது, 44 அடி உயரமுள்ள தேர், சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வந்து தெற்கு மாட வீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதிகள் வழியாக மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சன்னதி தெரு வந்து தேர் நிலையை வந்தடையும்.
தற்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று தியாகராஜர் கோவில் திருத்தேர் செல்வதற்கு வசதியாக காலடிப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் மார்க்கெட் வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 45 அடிக்கும் உயரமான தூண்களால் உயர்த்தப்பட்ட பாதை அமைக்கப்பட்டு உள்ளன.
மற்ற இடங்களில் 30 முதல் 35 அடி உயரமுள்ள தூண்களில் உயர்த்தப்பட்ட பாதை அமைந்து இருக்கும். இதன் காரணமாக தேரோட்டம் நிச்சயம் பாதிக்காது என்று கூறப்படுகிறது.
மெட்ரோ ரெயில் தூண்களுக்கு இடையே தேர் செல்லும் திருத்தேரோட்டத்திற்காக, தேர் மராமத்து பணிகள், தார் சாலை அமைத்தல், மாட வீதிகளில் இடையூறாக உள்ள மரக் கிளைகள் அகற்றுதல் போன்ற பணிகள் மும்முரமாக நடக்கிறது.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 8-ந் தேதி நடக்கிறது. 10-ந் தேதி இரவு 18 திருநடனம், தியாகராஜர் பந்தம் பறி உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
Related Tags :
Next Story