பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வு தொடக்கம் தமிழ் தேர்வை 16,417 மாணவ-மாணவிகள் எழுதினர்


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வு தொடக்கம் தமிழ் தேர்வை 16,417 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 5 March 2020 4:00 AM IST (Updated: 5 March 2020 2:17 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வு நேற்று தொடங்கியது. இதில் தமிழ் தேர்வினை 16,417 மாணவ-மாணவிகள் எழுதினர்.

அரியலூர்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்களில் உள்ள 75 பள்ளிகளில் இருந்து 3,927 மாணவர்களும், 4,038 மாணவிகளும் என மொத்தம் 7,965 பேர் பிளஸ்-1 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் 32 தேர்வு மையங்களில் தமிழ் தேர்வினை 7,829 பேர் கலந்து கொண்டு எழுதினர். ஆனால் 82 மாணவர்களும், 54 மாணவிகளும் என மொத்தம் 136 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அரியலூரில்...

இதே போல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, உடையார்பாளைம் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் உள்ள 82 பள்ளிகளில் இருந்து 4,207 மாணவர்களும், 4,824 மாணவிகளும் என மொத்தம் 9,031 பேர் பிளஸ்-1 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் 35 தேர்வு மையங்களில் தமிழ் தேர்வினை 8,588 பேர் கலந்து கொண்டு எழுதினர். ஆனால் 271 மாணவர்களும், 172 மாணவிகளும் என மொத்தம் 443 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது.

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-1 தமிழ் தேர்வினை மொத்தம் 16,417 மாணவ-மாணவிகள் எழுதினர். மொத்தம் 579 பேர் தேர்வு எழுத வரவில்லை. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அந்தந்த மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டிருந்தன.

கல்வி இயக்குனர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக 33 தலைமை ஆசிரியர்களும் மற்றும் 33 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் கூடுதல் துறை அலுவலராக 6 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தேர்வு மையத்திற்கு 9 வழித்தடங்களில் வினாத்தாள்-விடைத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல 9 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 396 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதே போல் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய 52 முதன்மை கண்காணிப்பாளர்களும், 52 துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு மையத்திற்கு 10 வழித்தடங்களில் வினாத்தாள்-விடைத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல 10 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 560 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன், வயது வந்தோர் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் பல்வேறு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விடைத்தாள்-வினாத்தாள் வழங்குவதில் குளறுபடி ஏதும் ஏற்பட்டிருக்கிறதா? தேர்வறையில் செல்போன் ஏதும் பயன்பாட்டில் இருக்கிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதே போல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை முதன்மை கல்வி அதிகாரி முத்துகிரு‌‌ஷ்ணன், வயது வந்தோர் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story