கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் ; முதல்-மந்திரி எடியூரப்பா இன்று தாக்கல் செய்கிறார்
2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்கிறார். இதில் புதிய திட்டங்கள், சலுகைகள் பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடக அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 5-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மாநில அரசு ஏற்கனவே அறிவித்தது.
அதற்கான சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. சட்டசபையில் நேற்று அரசியல் சாசனம் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்று பேசினர்.
இந்த நிலையில் கர்நாடக அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் (வரவு-செலவு திட்டம்) சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. காலை 11 மணிக்கு நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 15-வது நிதிக்குழுவின்படி கர்நாடகத்திற்கு சுமார் ரூ.11 ஆயிரம் கோடி நிதி குறைவாக கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு சரக்கு-சேவை வரி திட்டம் (ஜி.எஸ்.டி.) இழப்பீட்டுத்தொகை இன்னும் கிடைக்கவில்லை. அத்துடன் பொருளாதார சரிவு காரணமாக கர்நாடக அரசின் வரிவசூலில் சிறிது அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவற்றின் காரணமாக வரும் ஆண்டில் மொத்தத்தில் கர்நாடக அரசுக்கு சுமார் ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பட்ஜெட்டின் அளவு குறையும் என்று கூறப்படுகிறது. ஆயினும் வேளாண்மை, நீர்ப்பாசனத்துறையில் புதிய திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் புதிய சலுகைகளும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story