தர்மபுரி மாவட்டத்தில் 68 மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 19,548 மாணவர்கள் எழுதினர்


தர்மபுரி மாவட்டத்தில் 68 மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 19,548 மாணவர்கள் எழுதினர்
x
தினத்தந்தி 4 March 2020 11:00 PM GMT (Updated: 4 March 2020 10:05 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 68 மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 19,548 மாணவர்கள் எழுதினர்.

தர்மபுரி,

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் 68 மையங்களில் நேற்று பிளஸ்-1 தேர்வுகள் தொடங்கியது. நேற்று தமிழ் மொழிப்பாட தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத மாணவ, மாணவிகள் தனித்தேர்வர்கள் என மொத்தம் 20,699 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 19,548 பேர் தேர்வை எழுதினார்கள். 1,151 பேர் நேற்று தேர்வை எழுத வரவில்லை.

இந்த தேர்விற்காக 68 முதன்மை கண்காணிப்பாளர்களும், 68 துறை அலுவலர்களும், 23 வழித்தட அலுவலர்களும் பணியில் ஈடுபட்டனர். பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,300-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பிளஸ்-1 தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த தேர்விற்காக அமைக்கப்பட்டுள்ள வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் இருந்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வழித்தட அலுவலர்கள் மூலம் வினாத்தாள் கட்டுகள் தேர்வு மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மேற்பார்வையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அவசர தேவைக்கு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் தேவையுள்ள இடங்களில் பஸ் வசதி செய்யப் பட்டுள்ளது.

Next Story