கஞ்சா விற்ற பெண் உள்பட 6 பேர் கைது; ரூ.23 லட்சம் கஞ்சா, பணம் பறிமுதல்


கஞ்சா விற்ற பெண் உள்பட 6 பேர் கைது; ரூ.23 லட்சம் கஞ்சா, பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 6 March 2020 4:15 AM IST (Updated: 5 March 2020 10:15 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வீடுகளில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.23 லட்சம் கஞ்சா, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு நகரில் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில், இந்திராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அங்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அந்த வீட்டில் இருந்து கஞ்சா பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு வசித்து வந்த ஒரு பெண் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கவிதா (வயது 23), தனுர்ஜாய் (25), பங்கி மாத்யராஜ்(26) என்று தெரிந்தது. இவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, அவற்றை பெங்களூருவுக்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேர் மீதும் இந்திராநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல, மைகோ லே-அவுட்டில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்ததாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுப்பா ரெட்டி என்ற சுரேஷ் (42), பெங்களூரு அசோக்நகர் அருகே வசிக்கும் கவுரவ் என்ற ஜனார்தன் (25), உளிமாவு பகுதியை சேர்ந்த முகமது அம்ஜர் சம்ஷாத் (22) ஆகிய 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 3 பேரும் விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான 3 பேர் மீதும் மைகோ லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைதான 6 பேரிடமும் இருந்து ஒட்டு மொத்தமாக 43 கிலோ கஞ்சா, ரூ.20 ஆயிரம், ஒரு மோட்டார் சைக்கிள், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.23 லட்சம் என்றும் மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார். கைதான 6 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story