பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-2 ஆங்கில தேர்வை 15,758 மாணவ-மாணவிகள் எழுதினர்


பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-2 ஆங்கில தேர்வை 15,758 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 6 March 2020 4:30 AM IST (Updated: 6 March 2020 2:04 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-2 ஆங்கில தேர்வை 15,758 மாணவ, மாணவிகள் எழுதினர்.

பெரம்பலூர்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கியது. நேற்று அவர்களுக்கு ஆங்கில தேர்வு நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்களில் உள்ள 73 பள்ளிகளில் இருந்து 3,864 மாணவர்களும், 4,038 மாணவிகளும் என மொத்தம் 7,902 பேர் பிளஸ்-2 ஆங்கில தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் 32 தேர்வு மையங்களில் ஆங்கில தேர்வினை 7,619 பேர் கலந்து கொண்டு எழுதினர். ஆனால் 137 மாணவர்களும், 144 மாணவிகளும் என மொத்தம் 281 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அரியலூர்

இதே போல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் உள்ள 82 பள்ளிகளில் இருந்து 3,814 மாணவர்களும், 4,740 மாணவிகளும் என மொத்தம் 8,554 பேர் பிளஸ்-2 ஆங்கில தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் 35 தேர்வு மையங்களில் ஆங்கில தேர்வினை 8,139 பேர் கலந்து கொண்டு எழுதினர். ஆனால் 212 மாணவர்களும், 203 மாணவிகளும் என மொத்தம் 415 பேர் தேர்வு எழுத வரவில்லை. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-2 ஆங்கில தேர்வினை மொத்தம் 15,758 மாணவ-மாணவிகள் எழுதினர். மொத்தம் 696 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தனித்தேர்வர்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வில் ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெறாத 39 பேர் தனித்தேர்வர்களாக தேர்வெழுத தகுதி பெற்றிருந்தனர். ஆனால் அதில் 5 பெண்கள் தேர்வு எழுத வரவில்லை. பிளஸ்-2 பழைய ஆங்கில பாடத்திட்டத்தில் தனித்தேர்வர்களாக 8 பேர் தேர்வெழுத தகுதி பெற்றிருந்ததில், 2 பெண்கள் தேர்வுக்கு வரவில்லை. அரியலூர் மாவட்டத்தில் தனித்தேர்வர்களாக ஆங்கில தேர்வினை எழுத தகுதி பெற்றிருந்த 32 பேரில், 3 ஆண்கள் தேர்வு எழுத வரவில்லை.

காப்பி அடிக்கவில்லை

மாணவ, மாணவிகள் தேர்வு அறைக்கு உள்ளே நுழையும் முன்பு அறை கண்காணிப்பாளர்களால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தனர். தேர்வு நடந்து கொண்டிருந்த போது இடை, இடையே பறக்கும் படை அதிகாரிகள் மாணவ, மாணவிகள் காப்பி அடிக்க துண்டு சீட் ஏதும் வைத்திருக்கிறார் களா? என்பதை சோதனையிட்டு கண்காணித்தனர். ஆங்கில தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் எவ்வித ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாகவும், காப்பி அடித்ததாகவும் யாரும் பிடிபடவில்லை. பிளஸ்-2 கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு வருகிற 9-ந்தேதி தேர்வு நடக்கிறது. இன்று (வெள்ளிக்கிழமை) பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில தேர்வு நடக்கிறது.

Next Story