போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி செய்ததாக 2 பேர் மீது வழக்குப்பதிவு


போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி செய்ததாக 2 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 March 2020 4:00 AM IST (Updated: 6 March 2020 2:32 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணங்களை தயாரித்து நில மோசடி செய்ததாக 2 பேர் மீது நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா புலியூர் தென்னத்திரையான்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 50). இவர் புதுக்கோட்டை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில், தனது தந்தை மாரிமுத்துவிற்கு சொந்தமான தென்னத்திரையான்பட்டியில் உள்ள நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர், தனது தந்தை மருதமுத்து என்பதை மாரிமுத்து என போலியாக ஆவணங்களை மாற்றி 22.9.2008- அன்று குளத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார்.

2 பேர் மீது வழக்குப்பதிவு

இதைத்தொடர்ந்து பழனிவேல், அந்த நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து எனது தந்தைக்கு சொந்தமான இடத்தையும் சேர்த்து நீர்பழனி இந்தியன் வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று உள்ளார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் பாலமுருகன் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்து உள்ளார். இது குறித்து நான் அவர்களிடம் கேட்டதற்கு என்னை தகாத வார்த்தை களால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், போலி ஆவணங்களை தயாரித்து நில மோசடி செய்ததாக தென்னத்திரையான்பட்டியை சேர்ந்த பழனிவேல், பாலமுருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story