காய்ச்சல், இருமல் ஏற்பட்டால் டாக்டரிடம் பொதுமக்கள் உரிய சிகிச்சை பெற வேண்டும் கலெக்டர் பேச்சு


காய்ச்சல், இருமல் ஏற்பட்டால் டாக்டரிடம் பொதுமக்கள் உரிய சிகிச்சை பெற வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 6 March 2020 5:00 AM IST (Updated: 6 March 2020 3:12 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல் பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக டாக்டரிடம் உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசினார்.

தர்மபுரி,

கொரோனா வைரஸ் முன்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகள் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், அரூர் உதவி கலெக்டர் பிரதாப், அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகை வைரஸ் கிருமியாகும். இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், சளி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். கொரோனா அறிகுறிகள் உள்ள நபர் இருமும் போதும், தும்மும் போதும் நேரடியாக பரவுகிறது.

சிகிச்சை பெற வேண்டும்

பொதுமக்கள் தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைகுட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளையும் கிருமிநாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள டாக்டரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். இளநீர், ஓ.ஆர்.எஸ்.கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை பருக வேண்டும். சுற்றுலா செல்லும்போது பொதுமக்கள் விழிப்புணர்வு அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். சளி, இருமல் பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்கள் மற்றும் விழாக்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. போதிய விழிப்புணர்வுடன் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ஸ்டீபன்ராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கீதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகலட்சுமி, உதவி கலெக்டர் தேன்மொழி, அனைத்து வட்டார அரசு ஆரம்பசுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், பொறுப்பு மருத்துவ அலுவலர்கள், தனியார் டாக்டர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story