பட்டாநிலத்தில் இருந்து வெளியேற்ற முயற்சி: சப்-கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் மனு


பட்டாநிலத்தில் இருந்து வெளியேற்ற முயற்சி: சப்-கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் மனு
x
தினத்தந்தி 6 March 2020 4:00 AM IST (Updated: 6 March 2020 3:43 AM IST)
t-max-icont-min-icon

பட்டாநிலத்தில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கும் தனியார் மில் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சப்-கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பழனி,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை பழனி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் சப்-கலெக்டர் உமாவை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பழனி அருகே ஆண்டிப்பட்டியில் சுமார் 70 ஏக்கர் பட்டா நிலம் அரசு சார்பில் ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அந்த நிலத்தை தனியார் மில் உரிமையாளர்கள் சிலர் அபகரிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர். அதோடு அந்த தனியார் மில் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட நிலத்தில் சோலார் மின்வேலி அமைக்கவும், பழனி போலீசார் உதவியுடன் விவசாயிகளை அந்த நிலத்தில் இருந்து வெளியேற்றவும் முயற்சிக்கின்றனர். எனவே அத்துமீறி செயல்படும் தனியார் மில் உரிமையாளர்கள் மீதும், உடந்தையாக செயல்படும் போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு நிலத்தை திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர் உமா இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து புதுதாரா புரம் சாலை வழியே குளத்துரோடு ரவுண்டானா பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது சம்பந்தப்பட்ட தனியார் மில் உரிமையாளர்கள் மற்றும் போலீசாருக்கு எதிராக அவர்கள் கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ராஜமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story