பெங்களூருவில் மகனை கொன்று பெண் தற்கொலை உடல்நலக்குறைவால் விபரீத முடிவு


பெங்களூருவில்   மகனை கொன்று பெண் தற்கொலை    உடல்நலக்குறைவால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 7 March 2020 3:30 AM IST (Updated: 7 March 2020 12:20 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், உடல் நலக்குறைவால் மகனை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்ட விபரீதம் நடந்து உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு மைசூரு ரோடு அருகே பாபுஜிநகர் பகுதியை சேர்ந்தவர் ஷெட்டி. லாரி டிரைவர். இவரது மனைவி சசிகலா. இந்த தம்பதிக்கு ஹேமந்திரி(வயது 11) என்ற மகன் இருந்தான்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சசிகலாவுக்கும்,, அவரது மகனுக்கும் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனாலும் 2 பேருக்கும் உடல்நலம் சரியாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சசிகலா தற்கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் தான் இறந்து விட்டால் மகனை கவனிக்க யாரும் இல்லை என்று நினைத்த சசிகலா, மகனை கொன்று தானும் தற்கொலை செய்ய நினைத்தார்.

கொலை-தற்கொலை

இந்த நிலையில் சசிகலா, ஹேமந்திரியை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த பேடராயனபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹேமந்திரி, சசிகலாவின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது உடல்நலக்குறைவு காரணமாக மகனை கொன்று சசிகலாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதன்பின்னர் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சசிகலா எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் எடுத்து கொண்டனர். இதுகுறித்து பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story