திருச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை; சுகாதார முதன்மை செயலாளர் ஆய்வு


திருச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை; சுகாதார முதன்மை செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 7 March 2020 3:45 AM IST (Updated: 7 March 2020 1:42 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க திருச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு தீவிர பரி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஷீலா ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

செம்பட்டு, 

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் பயணிகளை விமானநிலையத்தில் மருத்துவக்குழுவினர் தீவிர பரிசோதனை செய்து அனுப்பி வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் இதற்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள வார்டில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சியில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 3 கவுண்ட்டர்களில் 6 டாக்டர்கள், 16 நர்சுகள் ஆகியோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை கண்டறிய பிரத்யேக கருவிகள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை மருத்துவக் குழுவினர் முகக்கவசம் அணிந்து பரிசோதனை செய்து அனுப்பி வருகின்றனர்.

பயணிகளிடம் உடல் நலம் குறித்து விசாரிக்கின்றனர். மேலும் உடல் நிலையில் பாதிப்பு இருந்தால் தாங்களாகவே ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையிலும் அவர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து திருச்சி வந்த சில பயணிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு இல்லாததால் அவர்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து இந்திய விமானநிலைய ஆணையக்குழும அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகளிடம் காணொலி காட்சி மூலம் தினமும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஷீலா ராஜ்குமார் திருச்சி வந்தார்.

அவர் விமானநிலையத்தில் மருத்துவக்குழுவினர் மேற்கொள்ளும் பரிசோதனைகளை ஆய்வு மேற்கொண்டார். இதுவரை எத்தனை பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது எனவும், அறிகுறி இருந்தவர்கள், வைரஸ் தாக்கியவர்கள் யாரேனும் வந்தனரா? எனவும் கேட்டறிந்தார். மேலும் சோதனைகளை தீவிரமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள கூறினார்.

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக திருச்சி விமானநிலையத்திற்கு பயணிகளின் வருகை குறைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து ஆயிரமாக குறைந்துள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 11 சதவீதம் பயணிகளின் வருகை குறைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

Next Story