தஞ்சை மெயின் லைனில் அனைத்து ரெயில்களும் ஜூலை மாதம் முதல் மின்சாரத்தில் இயக்கப்படும்; தென்னக ரெயில்வே பொதுமேலாளர் பேட்டி


தஞ்சை மெயின் லைனில் அனைத்து ரெயில்களும் ஜூலை மாதம் முதல் மின்சாரத்தில் இயக்கப்படும்; தென்னக ரெயில்வே பொதுமேலாளர் பேட்டி
x
தினத்தந்தி 6 March 2020 11:48 PM GMT (Updated: 6 March 2020 11:48 PM GMT)

தஞ்சை மெயின் லைனில் அனைத்து ரெயில்களும் ஜூலை மாதம் முதல் மின்சாரத்தில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் கூறினார்.

தஞ்சாவூர், 

தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் ரெயில் டிரைவர்கள், கார்டுகளுக்கான ஓய்வறை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை சென்னை தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர், தஞ்சை ரெயில் நிலைய நுழைவு வாயிலில் வாகனங்கள் நிறுத்தும் இடம், டிக்கெட் கொடுக்கும் இடம், கண்காணிப்பு அறை, நடைமேடை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி-அரியலூர்-விழுப் புரம் ரெயில் பாதையில் இயக்கப்படும் ரெயில்களை ஒப்பிடும்போது திருச்சி- தஞ்சை-விழுப்புரம் மெயின் லைனில் இயக்கப்படும் ரெயில்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், மெயின் லைனில் அதிக அளவில் ரெயில்களை இயக்க வேண்டும் எனவும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. வலியுறுத்தினார்.

அவரது கோரிக்கையின்படி மெயின் லைனில் கூடுதல் ரெயில்களை இயக்க முயற்சி மேற்கொள்ளப்படும். திருச்சி-தஞ்சை இடையே குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிவிரைவு ரெயில் இயக்குவது, சோழன் விரைவு ரெயிலில் சாதாரண இருக்கை பெட்டிகளை கூடுதலாக இணைப்பது, தூத்துக்குடி- சென்னை, மதுரை-சென்னை பாதைகளில் ரெயில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் பழனிமாணிக்கம் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார். இதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படும்.

செங்கோட்டை-சென்னை இடையே தஞ்சை வழியாக முன்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சை வழியாக செல்லும் ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணி பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. மயிலாடுதுறை-தஞ்சை இடையேயான மின்மயமாக்கல் பணி மட்டுமே மீதமுள்ளது. இந்த பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

அதன்பிறகு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் முதல் மெயின் லைனில் அனைத்து ரெயில்களும் மின்சாரத்தில் இயக்கப்படும். இதன்மூலம் ரெயில்களின் வேகம் அதிகரிக்கும். திருவாரூர்-காரைக்கால் மின்மயமாக்கல் பணி மார்ச் மாதத்துக்குள் முடிந்து விடும்.

காரைக்குடி-திருத்துறைப்பூண்டி ரெயில் பாதையில் கேட் கீப்பர்கள் ஜூன் மாதத்துக்குள் நியமிக்கப்படுவர். அதன்பிறகு இந்த வழித் தடத்தில் ரெயில்களின் வேகம் அதிகப்படுத்தப்படும். மேலும் இந்த தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அஜய்குமார் உடன் இருந்தார்.

தென்னக ரெயில்வே பொதுமேலாளரிடம் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., தஞ்சை-திருச்சி ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தினர், தஞ்சை மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர், பட்டுக்கோட்டை தாலுகா ரெயில்வே பயணிகள் நல சங்கத்தினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், பாபநாசம் ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

Next Story