அரசு பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை காதல் தோல்வி காரணமா? போலீசார் விசாரணை


அரசு பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை காதல் தோல்வி காரணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 March 2020 6:00 AM IST (Updated: 7 March 2020 10:34 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் அரசு பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார். காதல் தோல்வி காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி காந்திமார்க்கெட் தாராநல்லூரில் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் அரியமங்கலம் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவரது மகள் புனிதவதி (வயது 31). இவர் எம்.பி.பி.எஸ், எம்.டி. படித்து முடித்துவிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் டாக்டர் புனிதவதியின் பெற்றோர், கோவிலுக்கு சென்றனர். பின்னர் இரவில் வீடு திரும்பினர். அப்போது புனிதவதியின் அறையில் மின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதனால் அவர் படித்து கொண்டிருப்பார் என பெற்றோர் கருதி விட்டு விட்டனர்.

தற்கொலை

இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியை தாண்டியும் அறையில் மின் விளக்கு அணைக் கப்படாமல் இருந்தது. இதனால் அவரது பெற்றோர் சந்தேகமடைந்தனர். இதையடுத்து அறைக்கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை. இதனால் அவர்கள் சந்தேகமடைந்தனர். கதவை உடைத்து உள்ளே புகுந்து சென்று பார்த்தபோது அங்கு அவர் மயங்கி கிடந்தார். அவரது அருகில் ஒரு ஊசியும், மருந்து பாட்டிலும் கிடந்தது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு புனிதவதியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். டாக்டர் புனிதவதி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து டாக்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

காதல் தோல்வி

இந்த சம்பவம் குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் புனிதவதி சென்னையில் மருத்துவ படிப்பு படித்த போது ஒருவரை காதலித்ததாகவும், அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் புனிதவதி விரக்தியில் இருந்துள்ளார். காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டர் ஒருவர் மருத்துவமனையில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்திருந்தார். இந்த நிலையில் பெண் டாக்டர் ஒருவரும் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story