தற்கொலைக்கு முன்பு வீடியோ பதிவை முகநூலில் வெளியிட்ட நித்யானந்தா சீடர்


தற்கொலைக்கு முன்பு வீடியோ பதிவை முகநூலில் வெளியிட்ட நித்யானந்தா சீடர்
x
தினத்தந்தி 8 March 2020 12:15 AM GMT (Updated: 2020-03-08T03:08:44+05:30)

தலைவாசல் அருகே தற்கொலைக்கு முன்பு முகநூலில் வீடியோ பதிவிட்டு நித்யானந்தாவின் சீடர் தற்கொலை செய்துள்ளார்.

தலைவாசல்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகளுர் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் தினே‌‌ஷ் (வயது 27). எம்.இ.பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். முன்னதாக அவர் கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில், அவருக்கு சீடராக இருந்து வந்தார். பின்னர் அவரை பெற்றோர் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

அதன்பின்னர் தான் அவர் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்த தினே‌‌ஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஜாதகத்தில் தோ‌‌ஷம்

விசாரணையில், 2017-ம் ஆண்டு நித்யானந்தா ஆசிரமத்தில் தினே‌‌ஷ் இருந்தபோது பெங்களூருவில் நெத்தியடி கும்பல் என்ற பிரிவிற்கு செயல் தலைவராக பத்திரானந்தா என்ற பெயரில், நித்தியானந்தாவுக்கு எதிராக மீம்ஸ் அனுப்புபவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்துள்ளார். ஆசிரமத்தில் இருந்த போது ஒரு பெண் சி‌‌ஷ்யையை தினே‌‌ஷ் காதலித்துள்ளார். அவரின் பெற்றோர் ஜாதகத்தில் தோ‌‌ஷம் இருப்பதாக கூறி திருமணம் செய்து வைக்கவில்லை.

இதனால் காதலித்த பெண்ணை பிரிய மனம் இல்லாததால் ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு நித்யானந்தாவின் கைலாச கிளையில் மீண்டும் செயல்பட்டுள்ளார். அங்கு நியூஸ் என்ற யூடியூப் சேனலை தினே‌‌ஷ் நடத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் தினே‌‌ஷ் இறப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோவில் உருக்கமான தகவல்களை கூறியுள்ளார்.

தவறான தகவல்

வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

நித்யானந்தாவின் பெண் சீடர் ஒருவரை காதலித்து வந்தேன். நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தோம். அதற்கு பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் ஜாதகம் பார்த்து சரியில்லை என்றனர். பின்னர் பெண்ணின் பெற்றோர் இதற்கு பரிகாரம் செய்து திருமணம் செய்து வைப்பதாக கூறினர். பின்னர் நான் நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்தபோது எனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், இதற்காக என்னை ஆசிரமத்தில் தனியாக பிரித்து வைத்ததாகவும், அந்த பெண்ணிடம் தவறான தகவலை சிலர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் பல பெண்களை புகைப்படம் எடுத்து நான் மிரட்டி வருவதாகவும் கூறியுள்ளனர். நான் அப்படிப்பட்டவன் எனக்கூறி அவர்கள் என்னை ஏற்கவில்லை. இதனால் தான் நான் இந்த முடிவை எடுத்தேன். இவ்வாறு அவர் வீடியோவில் பதிவு செய்து முகநூலில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story