ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்


ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 8 March 2020 5:09 AM IST (Updated: 8 March 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

ஊட்டி,

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொள்வதற்காக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வந்த போது, அரசு பெண் ஊழியர்கள், தோடர், இருளர் இன பெண்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

ஊட்டியில் கடந்த சில ஆண்டுகளாக 5 பெண்கள் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். அதில் முதல் பெண் ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவை இயக்க, அதில் கலெக்டர், சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் சராயு ஆகியோர் சிறிது தூரம் மகிழ்ச்சியுடன் பயணித்தனர். விழாவை முன்னிட்டு பலூன் பறக்க விடப்பட்டது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி கேக் வெட்டி பெண் அதிகாரிகளுக்கு ஊட்டினார். விழாவில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் சராயு பேசியதாவது:-

நான் கடலூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராக பணிபுரிந்த போது, பெண் ஊழியர்கள் காலை 10 மணிக்கு வந்து மாலை 5.45 மணிக்கு பணிகளை முடித்து செல்லுமாறு அறிவித்தேன். எனது உதவியாளர் என்னிடம், பெண் ஊழியர்களிடம் மட்டும் நீங்கள் சுமுகமாக நடந்து கொள்கிறீர்கள் என்றார். இதனை கருத்தில் கொண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று ஆண், பெண் ஊழியர்களை அழைத்து விழா கொண்டாடினேன்.

நான் என் குழந்தைகளிடம் பெண் குழந்தைகளிடம் சரிசமமாக உதவ வேண்டும் என்று கற்று கொடுக்கிறேன். நமது மகனுக்கு மருமகள் உதவி புரிய வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால், மகளுக்கு மருமகன் உதவ வேண்டும் என்று கூறுவது இல்லை. மகளையும், மருமகனையும் சமமாக பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் தயாரித்த பல்வேறு உணவு வகைகள் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. போ‌ஷான் அபியான் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டு, பலர் கையெழுத்திட்டனர். ஊட்டச்சத்து பிரசாரத்தை ஒரு தேசிய அளவிலான மக்கள் இயக்கமாக உருவாக்குவேன் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. விளையாட்டு, யோகாவில் சிறந்து விளங்கும் பெண்கள் மற்றும் பல்வேறு துறை பெண் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து இருளர், தோடர், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடந்தது. பெண்மையை போற்றுவோம் என்று பல வண்ணங்களில் கோலங்கள் போடப்பட்டு இருந்தது. விழாவில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா, சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி, மகளிர் திட்ட இயக்குனர் பாபு மற்றும் பல்வேறு அரசு துறை பெண் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Next Story