ஆன்லைன் வணிகம் நடத்தி ரூ.24½ லட்சம் மோசடி வாலிபர் கைது


ஆன்லைன் வணிகம் நடத்தி ரூ.24½ லட்சம் மோசடி வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 March 2020 5:29 AM IST (Updated: 8 March 2020 5:29 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் வணிகம் நடத்தி ரூ.24½ லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் அரசு ஊழியர் நகரை சேர்ந்தவர் ரகு (வயது 42). இவர் ஆன்லைன் மூலம் பங்கு சந்தை வணிகம் செய்து வருகிறார். இவருக்கும் ராஜபாளையத்தை சேர்ந்த அழகர்சாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர் மூலமாக ரகுவிற்கு தென்காசி மாவட்டம் ஆயக்குடியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் கலைச்செல்வன் (33) என்பவர் அறிமுகமானார். ரகுவும், கலைச்செல்வனும் பங்கு சந்தை சம்பந்தமாக அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

அப்போது ரகுவிடம், கலைச்செல்வன் தானும் தனது அண்ணியான சந்திரசேகர் மனைவி ரேவதியும் சேர்ந்து ஈகை வெண்டர்ஸ் என்ற பெயரில் ஆன்லைன் வணிகம் செய்து வருவதாகவும் அதற்கான அரசு உரிமம், வருமான வரி கணக்கு, நிரந்தர கணக்கு எண் தனது நிறுவனத்தின் பெயரில் வைத்திருப்பதாகவும், இதன் மூலம் ஆன்லைன் வணிகம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ரகுவிடம் எங்கள் நிறுவனத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால் அந்த முதலீட்டில் 2.5 சதவீதம் லாப தொகையாக உங்களது வங்கி கணக்கில் வரவு வைப்பதாகவும், நீங்கள் செலுத்தும் முதலீட்டுக்கு எங்கள் நிறுவனம் முழு பொறுப்பு என்றும், நாங்கள் நம்பிக்கையாகவும், நாணயமாகவும் நடந்து கொள்வோம் என்றும் கலைச்செல்வன் கூறியுள்ளார்.

இதை நம்பிய ரகு மற்றும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து கடந்த 12.4.2019 அன்று கலைச்செல்வனின் வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை ெசலுத்தினர். அதன் பிறகு பல்வேறு தேதிகளில் 7 மாதங்களாக மொத்தம் ரூ.34 லட்சத்து 45 ஆயிரத்து 129-ஐ ெசலுத்தினர்.

இந்த தொகையை பெற்றுக்கொண்ட கலைச்செல்வன், ரேவதி ஆகியோர் ஓரிரு நாட்கள் மட்டும் ரகுவின் வங்கி கணக்கில் லாப தொகையில் 2.5 சதவீதம் வீதம் ரூ.10 லட்சம் வரை செலுத்தியுள்ளனர். அதன் பிறகு அசலையும், லாப தொகையையும் தராமல் ரூ.24 லட்சத்து 50 ஆயிரத்தை ஏமாற்றி விட்டனர்.

இதுகுறித்து ரகு, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். மனுவை பெற்ற அவர், இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கலைச்செல்வன், ரேவதி ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று கலைச்செல்வனை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பரணிநாதன், பாஸ்கர் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரேவதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story