அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு


அயோத்தியில்   ராமர் கோவில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை   முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 8 March 2020 6:02 AM IST (Updated: 8 March 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை அளிப்பதாக அங்கு ராமரை வழிபட்ட பின்னர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர், முதல்-மந்திரி பதவியை பங்கிட்டு கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா, கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது.

மகா விகாஷ் அகாடி என பெயரிடப்பட்ட இந்த புதிய கூட்டணி அரசின் முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். முதல்-மந்திரி பதவி ஏற்று 100 நாட்கள் நிறைவு பெற்றதை அடுத்து உத்தவ் தாக்கரே நேற்று அயோத்தி சென்றார். சிறப்பு ரெயிலில் ஏற்கனவே சென்றிருந்த சிவசேனா தொண்டர்கள் உத்தவ் தாக்கரேயை வரவேற்றனர்.

ரூ.1 கோடி நன்கொடை

அயோத்தியில் ராமரை வழிபட்ட பின்னர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் கடவுள் ராமரின் ஆசீர்வாதத்தை பெற இங்கு வந்து இருக்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டில் நான் அயோத்திக்கு வருவது இது மூன்றாவது முறை. நான் பாரதீய ஜனதா உடனான உறவை தான் முறித்து உள்ளேன். இந்துத்வா உடனான உறவை முறிக்கவில்லை. பாரதீய ஜனதாவும், இந்துத்வாவும் வேறுபட்டவை. பாரதீய ஜனதா என்றால் இந்துத்வா என்று அர்த்தம் அல்ல.

ராம ஜென்ம பூமி போராட்டத்துக்கு பாலாசாகேப் (பால்தாக்கரே) குரல் கொடுத்தார். அப்போது ஸ்ரீராம் என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட செங்கற்கள் மராட்டியத்தில் இருந்து இங்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த செங்கற்கள் இன்னும் இங்கே இருக்கக்கூடும்.

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் அனைவருக்குமானதாக இருக்கும். உலகம் முழுவதும் இருந்து மக்கள் பார்க்க வரும் அளவிற்கு கோவில் கட்டப்பட வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மராட்டிய அரசு சார்பில் அல்லாமல் எனது அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆரத்தி வழிபாடு ரத்து

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையின் போது கலந்து கொள்வீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு, ராமர் விரும்பும் போதெல்லாம் நாங்கள் இங்கே வருவோம் என்று உத்தவ் தாக்கரே பதில் அளித்தார்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்தி சரயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி வழிபாடு மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உத்தவ் தாக்கரேயின் அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணத்தில் அவருடன் அவரது மகனும், மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் எம்.பி. ஆகியோர் சென்றிருந்தனர்.

Next Story