குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால்: சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் எஸ்.டி.பி.ஐ. தலைவர் முபாரக் பேட்டி


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால்: சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம்  எஸ்.டி.பி.ஐ. தலைவர் முபாரக் பேட்டி
x
தினத்தந்தி 8 March 2020 10:00 PM GMT (Updated: 8 March 2020 2:45 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

நெல்லை, 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–

பதவி விலக வேண்டும் 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஜனநாயக ரீதியில் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு போராட்டம் என்ற பெயரில் ஆளும் பா.ஜனதா கட்சி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் கலவரத்தை நடத்தி உள்ளனர். இதில் 53 பேர் உயிரிழந்து உள்ளனர். முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வாகனங்கள் அடையாளப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டு உள்ளது. 2002–ம் ஆண்டு குஜராத் கலவரத்தை முன்மாதிரியாக கொண்டே டெல்லி கலவரமும் நடத்தப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் துப்பாக்கிகளும், பெட்ரோல் குண்டுகளும் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு உள்ளன. கலவரத்தில் இறந்த பலரும் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர். வன்முறை கும்பலிடம் துப்பாக்கிகள் புழங்குவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கலவரங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடியவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். டெல்லி கலவரம் குறித்து பல நாடுகளில் உள்ள நாடாளுமன்றங்களில் விவாதம் நடத்தி இருக்கும் நிலையில், மத்திய அரசு இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தை நடத்த அனுமதி மறுக்கிறது. எனவே டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித் ஷாவும் பதவி விலக வேண்டும்.

சட்டசபையில் தீர்மானம் 

இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் தமிழக சட்டசபை கூட்ட தொடரில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் இவற்றை அமல்படுத்த மாட்டோம் எனவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு மத்திய அரசிடம் இந்த சட்டங்களில் இருந்து விலக்கு அளிப்பது என்று கேட்காமல், இந்த சட்டங்களை அமல்படுத்தக்கூடாது என்ற வலுவான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. வலுவான தீர்மானம் நிறைவேற்ற தவறினால் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். போராட்டம் நடத்திய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். கொரோனா வைரஸ் பரவாமல் முன்னெச்சரிக்கையாக மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நெல்லை மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி, மாநில பேச்சாளர்கள் சாகுல் அமீது உஸ்மானி, செய்யது அகமது சலபி, பேட்டை முஸ்தபா, செயலாளர்கள் ஹயாத் முகமது, பர்கிட் அலாவுதீன், தொகுதி தலைவர் மின்னதுல்லா, துணை தலைவர் ஜெபா, சலீமந்தீன், செயலாளர் புகாரி சேட் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story