சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம் யானை மீது பூத்தட்டு எடுத்து வரப்பட்டது


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம் யானை மீது பூத்தட்டு எடுத்து வரப்பட்டது
x
தினத்தந்தி 9 March 2020 4:15 AM IST (Updated: 8 March 2020 10:47 PM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி யானை மீது பூத்தட்டு எடுத்துவரப்பட்டது.

சமயபுரம்,

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஸ்ரீரங்கம் கோவிலின் மூலவரை போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிப்பெரும் சிறப்பு அம்சமாகும். அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்ச பலன் கிடைக்கும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு இக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்றும் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறார் என்பதற்கும் சிற்பச்சான்றுகள் உள்ளன.

பச்சை பட்டினி விரதம்

இக்கோவிலில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும் மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரம் ஆகும். எனவே தான் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருவுருவமாக காட்சி அளிக்கிறார். மும்மூர்த்திகளை நோக்கி, அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இக்கோவிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். அந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

பூச்சொரிதல் விழா

இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலின் பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க கோவிலின் கொடிமரத்தின் முன்பிருந்து யானை மீது பூத்தட்டுகளுடன் கோவில் குருக்கள் அமர்ந்து வந்தார்.

அதைத்தொடர்ந்து மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகன், கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் துரை.ராஜசேகரன், கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள், வி.துறையூர், மருதூர், மாகாளிகுடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூத்தட்டுகளை சுமந்து வந்தனர்.

பூக்கள் சாற்றப்பட்டன

இதைத்தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று, அம்மன் மீது பூக்கள் சாற்றப்பட்டது. இதையடுத்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டன. நேற்று முதல் அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்கிறார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி மேற்பார்வையில் தலைமை எழுத்தர் அழகேந்திரன், பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

பாதுகாப்பு பணியில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் தலைமையில், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் மேற்பார்வையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் உள்பட திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டனர். திருச்சி மற்றும் துறையூர் போன்ற பகுதிகளில் இருந்து வந்த அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் சமயபுரம் புதிய பஸ் நிலையம் வரை இயக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் தலைமையில் கோவில் குருக்கள், பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Next Story