ஊட்டியில் 11-வது நாளாக முஸ்லிம்கள் தர்ணா


ஊட்டியில் 11-வது நாளாக முஸ்லிம்கள் தர்ணா
x
தினத்தந்தி 8 March 2020 10:15 PM GMT (Updated: 2020-03-08T22:57:56+05:30)

ஊட்டியில் 11-வது நாளாக முஸ்லிம்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு(சி.ஏ.ஏ.) எதிராக தொடர் தர்ணா போராட்டம் ஊட்டி பெரிய பள்ளிவாசல் முன்பு நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் முஸ்லிம்கள் தினமும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 10-வது நாளாக முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் அப்துல் சமது தலைமை தாங்கினார். இரவில் நடந்த போராட்டத்தில் ஊட்டி எம்.எல்.ஏ. ஆர்.கணே‌‌ஷ் கலந்துகொண்டு பேசியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கடந்த 10 நாட்களாக ஊட்டியில் அமைதியாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளுடன் பெண்கள், ஆண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து கலவரத்துக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வகையில் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவால் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 9-ந் தேதி (அதாவது இன்று) தொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. உடன் காங்கிரஸ் கட்சியும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப உள்ளது. தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று நான் பேச உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார். ஊட்டியில் நேற்று 11-வது நாளாக தர்ணா போராட்டம் நடந்தது.

Next Story