காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கத்தியால் கழுத்தை அறுத்தபோது 13 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய தற்காப்பு கலை கற்றுக்கொடுத்த பெண் இன்ஸ்பெக்டருக்கு கமி‌‌ஷனர் பாராட்டு


காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கத்தியால் கழுத்தை அறுத்தபோது 13 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய தற்காப்பு கலை கற்றுக்கொடுத்த பெண் இன்ஸ்பெக்டருக்கு கமி‌‌ஷனர் பாராட்டு
x
தினத்தந்தி 8 March 2020 11:00 PM GMT (Updated: 2020-03-08T23:22:07+05:30)

காதல் தொல்லை கொடுத்த வாலிபர், கத்தியால் தனது கழுத்தை அறுத்தபோது பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்றுக்கொடுத்த தற்காப்பு கலை மூலம் பள்ளி மாணவி உயிர் தப்பினார். இதையடுத்து பெண் இன்ஸ்பெக்டரை போலீஸ் கமி‌‌ஷனர் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை,

சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த நித்யா என்ற நித்யானந்தம்(26) என்ற வாலிபர் காதல் தொல்லை அளித்து வந்தார்.

கடந்த 4-ந்தேதி அந்த மாணவி, பள்ளியில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது நித்யானந்தம், அந்த மாணவியை தடுத்து நிறுத்தி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். அதனை ஏற்காமல் மாணவி அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது நித்யானந்தம் மறைந்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்தார். சுதாரித்துக்கொண்ட மாணவி, தற்காப்புகலை மூலம் அவரிடம் இருந்து தப்பினார். எனினும் கத்தியால் அறுத்ததில் மாணவி காயம் அடைந்தார். பின்னர் நித்யானந்தம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுதொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நித்யானந்தம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அண்ணாநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு தற்காப்பு கலை குறித்த பயிற்சியும், விழிப்புணர்வு வகுப்புகளும் நடத்தி வருகிறார்.

அவர் அளித்த தற்காப்பு கலை பயிற்சியை பயன்படுத்திதான் அந்த மாணவி, உயிர் தப்பியது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவியையும், இன்ஸ்பெக்டர் தனலட்சுமியையும் போலீஸ் கமி‌‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கினார். இதில் காயமடைந்த மாணவியிடம் உடல்நலம் குறித்து விசாரித்து, ஆறுதலும் கூறினார்.

Next Story