மாசிமக திருவிழா: கும்பகோணம், மகாமக குளத்தில் தீர்த்தவாரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்


மாசிமக திருவிழா: கும்பகோணம், மகாமக குளத்தில் தீர்த்தவாரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
x
தினத்தந்தி 9 March 2020 4:15 AM IST (Updated: 8 March 2020 11:29 PM IST)
t-max-icont-min-icon

மாசிமக திருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

கும்பகோணம்,

மாசிமகத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.

ரிஷப வாகனங்களில்...

இதை முன்னிட்டு ஆதி கும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவன் கோவில்களில் இருந்து சாமியும், அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனங்களில் புறப்பட்டு, மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினர்.

பின்னர் அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, சாமி தரிசனம் செய்தனர்.

மாசிமக தீர்த்தவாரி காரணமாக நேற்று அதிகாலை 4 மணி முதலே ஏராளமான பக்தர்கள் மகா மக குளத்தில் திரண்டு நின்று சாமி வருகைக்காக காத்திருந்தனர்.

ஆதிவராக பெருமாள்

கும்பகோணம் ஆதிவராக பெருமாள் கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி வராகபெருமாள், அம்புஜவல்லி தாயாருடன் வராக குளத்தில் எழுந்தருளினார். இதையடுத்து தீர்த்தவாரி நடந்தது. பாபநாசம் அருகே நல்லூரில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி உற்சவத்தையொட்டி கல்யாணசுந்தரேஸ்வரர், கிரிசுந்தரி அம்மனுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவில் குளத்தில் எழுந்தருளினார். இதையடுத்து திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் தீர்த்தவாரி நடந்தது.
1 More update

Next Story