சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி? டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி


சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி? டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 9 March 2020 5:45 AM IST (Updated: 9 March 2020 12:07 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி? என்பது குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பொட்டனேரியில் பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தம்பிகள், தங்கைகள் அதிகம் பேர் உள்ளனர். அதாவது இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி பா.ம.க. தான். தமிழக இளைஞர்கள் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து கல்வியும் இலவசமாக வழங்கப்படும்.

இலவச மருத்துவம்

தரமான மருத்துவ வசதியும் இலவசமாக வழங்கப்படும். தற்போது வேலை இல்லாத திண்டாட்டம் உள்ள நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம்.

எனவே பல நல்ல திட்டங்களை செயல்படுத்த பொதுமக்கள் எங்களுக்கு சட்டசபை தேர்தலில் வாய்ப்பு தர வேண்டும். இதுபற்றி பா.ம.க.வினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சருக்கு வாழ்த்து

கூட்ட முடிவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

உலக மகளிர் தினத்தில் பெண்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பெண்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். காவிரி உபரிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்ததற்கு வாழ்த்துகள்.

மேலும் கோனூர், மேச்சேரி, சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, பனமரத்துப்பட்டி ஏரி, வசிஷ்ட நதி மற்றும் சேலம் மாவட்டம் முழுவதும் பயன்பெறும் வகையில் காவிரி உபரிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

யாருடன் கூட்டணி?

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க- தி.மு.க., காங்கிரஸ் மற்றும் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் நாங்கள்தான் அடுத்த ஆட்சியை அமைப்போம் என்று சொல்கிறார்கள்.

கட்சி தொடங்கி 30 ஆண்டுகள் ஆன நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று சொல்லக்கூடாதா? அடுத்த ஆண்டு (2021) நடைபெறும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் வரும் நேரத்தில் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story