சிங்கம்புணரி அருகே, அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டு - காளைகள் முட்டியதில் 70 பேர் காயம்


சிங்கம்புணரி அருகே, அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டு - காளைகள் முட்டியதில் 70 பேர் காயம்
x
தினத்தந்தி 8 March 2020 10:15 PM GMT (Updated: 2020-03-09T00:13:43+05:30)

சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. காளைகள் முட்டியதில் 70 பேர் காயம் அடைந்தனர்.

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டு திருவிழா பழங்காலம் முதலே நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களில் இப்பகுதியில் போர் தொடுத்த கேரள சிங்கவள நாட்டு மன்னர் இப்பகுதியை கைப்பற்றினர்.

பின்னர் இப்பகுதியை ஐந்தாக பிரித்து அதனை முல்லை மங்கலம், சீர்சேர்ந்த மங்கலம், கண்ணமங்கலம், சதுர்வேத மங்கலம் மற்றும் வேழமங்கலம் என பிரித்து கேரள சிங்க வளநாட்டு மன்னர் ஆட்சி நடைபெற்றது. அந்த காலத்தில் இருந்து இன்று வரை அரளிப்பாறையில் மாசி மகத்தில் ஐந்து நிலை நாட்டார்களால் மஞ்சுவிரட்டு நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன் மேற்பார்வையில் சிங்கம்புணரி தாசில்தார் பஞ்சவர்ணம் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக அரளிப்பாறை மலையடிவாரத்தில் மஞ்சு விரட்டில் கலந்து கொள்ளும் காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக தொழுவத்தில் அடைத்தனர். இதை தொடர்ந்து ஐந்து நிலை நாட்டார்களுக்கு ஊரின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் கோவில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு அவைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதைதொடர்ந்து மஞ்சுவிரட்டில் பங்கு பெறும் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 800-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சூரக்குடி மற்றும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனை சார்பில் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் சிங்கம்புணரி புசலியம்மாள் மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்பட்டது. மஞ்சுவிரட்டை காண சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

காளைகள் முட்டியதில் 70 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் 23 பேர் சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் ேசர்க்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வீரைய்யா(வயது 65), சின்னச்சாமி(45), ராஜ்(28), சண்முகம்(50), யோகேஷ் கண்ணா(19), ஜஸ்டீன்(27), சதீஸ்(34), பன்னீர்செல்வம்(57), இளையராஜா (27) ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கூடுதல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story