உத்தமபாளையம் அருகே, வக்கீல் கொலை வழக்கில் கார் டிரைவர் கைது


உத்தமபாளையம் அருகே, வக்கீல் கொலை வழக்கில் கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 8 March 2020 10:45 PM GMT (Updated: 2020-03-09T02:04:57+05:30)

உத்தமபாளையம் அருகே வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

உத்தமபாளையம், 

கம்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 42). உத்தமபாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6-ந்தேதி வழக்கு தொடர்பான பணிகளை முடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றார். உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல், காரால் ரஞ்சித்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரஞ்சித்குமாரை, காரில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித்குமார் பலியானார். நிலப்பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 வக்கீல்கள் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட செல்வம் என்ற சூப் செல்வத்தை (37) உத்தமபாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் செல்வம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 15 நாள் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவர் முத்துலட்சுமி உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறைக்கு செல்வம் அழைத்து செல்லப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில், கைதாகி உள்ள செல்வம் என்ற சூப் செல்வம் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயபிரபுவிடம் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் தேனியாகும். இவர் கொலை சம்பவத்தில் கார் டிரைவராக செயல்பட்டுள்ளார். காரில் வந்தவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. வக்கீல் ரஞ்சித்குமாரை கொலை செய்த பின்னர், செல்வம் காரில் சில கி.மீ. தூரம் சென்று கூலிப்படையினரை இறக்கிவிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் அருகில் இருந்த வாழைத்தோட்டம் வழியாக தப்பிச் சென்றனர். பின்னர் செல்வம் காரை எடுத்து கொண்டு கம்பம் நோக்கி சென்றுவிட்டார். இந்தநிலையில் தான் செல்வம் தற்போது பிடிபட்டுள்ளார். அவரிடம் கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story