சேலத்தில் நள்ளிரவில் பயங்கரம் பெண் உள்பட 3 பேர் கழுத்தை அறுத்து படுகொலை


சேலத்தில் நள்ளிரவில் பயங்கரம் பெண் உள்பட 3 பேர் கழுத்தை அறுத்து படுகொலை
x
தினத்தந்தி 9 March 2020 12:30 AM GMT (Updated: 8 March 2020 9:44 PM GMT)

சேலத்தில் நள்ளிரவில் பெண் உள்பட 3 பேர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வடமாநில வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சேலம்,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 27). இவரது மனைவி நந்தனா (25). இவர்களுக்கு 6 மாத ஆண்குழந்தை ஒன்று உள்ளது. ஆகாஷின் உறவினர் சன்னி (16). இவர்கள் அனைவரும் சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே உள்ள பெருமாம்பட்டி கிலான்வட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். மேலும் ஆகாஷ், நந்தனா, சன்னி ஆகியோர் அதே பகுதியில் உள்ள ஒரு வெள்ளிப்பட்டறையில் கூலித்தொழிலாளர்களாக வேலைபார்த்து வந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர். இவர்களுடைய பக்கத்து வீட்டை வாடகைக்கு எடுத்து ஆக்ரா பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் தங்கி உள்ளனர். ஆகாஷ் குடும்பத்திற்கும், அந்த 4 வாலிபர்களுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

கழுத்தை அறுத்து படுகொலை

வடமாநில தொழிலாளர்களான இவர்கள் வசித்து வந்த வீட்டை சுற்றி தோட்டங்கள் காணப்படுகின்றன. ேமலும் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் நந்தனாவின் ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். அப்போது ஆகாஷ், நந்தனா, சன்னி ஆகிய 3 பேரும் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு, ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சேலம் இரும்பாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன் பேரில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் தங்கதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது 3 பேரும் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் அங்குள்ள தோட்டத்துக்குள் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

தப்பி ஓடிய வாலிபர்கள்

இதனிடையே போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது ஆகாஷ் வீட்டின் அருகில் வசித்து வந்த 4 வாலிபர்கள் தப்பி ஓடும் காட்சி பதிவாகி இருந்தது. இதனால் அந்த 4 வாலிபர்கள் தான், இவர்கள் 3 பேரையும் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியதை போலீசார் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கி இருந்த வீட்டை சோதனை செய்தனர். வீட்டில் மதுபாட்டில்கள் சிதறி கிடந்தன. அவர்கள் யார் என்பது குறித்து எந்தவித ஆவணங்களும் கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய வடமாநில வாலிபர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வடமாநில வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story