குமரி மாவட்டத்தில் தொடர் கைவரிசை: பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது 50 பவுன் நகைகள் மீட்பு


குமரி மாவட்டத்தில் தொடர் கைவரிசை: பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது 50 பவுன் நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 9 March 2020 5:30 AM IST (Updated: 9 March 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

நித்திரவிளை,

குமரி மாவட்டத்தில் சாலையில் நடந்து மற்றும் ஸ்கூட்டரில் செல்லும் பெண்களை வழிமறித்து நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து குற்றவாளியை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கோமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்வின், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் போக்சோ மற்றும் போலீசார் நித்திரவிளை ஆலுமூடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரை போலீஸ்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கேரள மாநிலம் பாலராமபுரம் பகுதியை சேர்ந்த குமார் மகன் பிரவீன் (வயது 23) என்பதும், குமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

50 பவுன் நகை மீட்பு

தொடர்ந்து நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில் 2018 -ம் ஆண்டு மார்த்தாண்டம் அருகே ஆலுவிளை பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் தங்க சங்கிலி, கடந்த பிப்ரவரி மாதம் நம்பாளி பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் இருந்து 9 பவுன் தங்க சங்கிலி பறித்ததை ஒப்புக்கொண்டார். மேலும், இரணியல், மார்த்தாண்டம், திங்கள்சந்தை போன்ற பகுதிகளிலும் பெண்களிடம் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதையடுத்து பிரவீனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 பவுன் திருட்டு நகைகளை மீட்டனர். மேலும், 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story