ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் தீ ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் தீ ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 10 March 2020 12:00 AM GMT (Updated: 9 March 2020 5:04 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் ஏற்பட்ட தீயை ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருச்சி,

108 வைண தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனவும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் கருடன் சன்னதி அருகே பிரசாத கடை உள்ளது. இதனை ஏலம் எடுத்து ஒருவர் நடத்தி வருகிறார். இந்தகடையில் விற்பனை செய்யப்படும் பிரசாதம் பிரசித்தி பெற்றதாகும்.

இந்நிலையில் கோவிலின் பிரசாத கடையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென கரும்புகை வெளிவந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைக்கண்ட பணியாளர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் அங்கிருந்த தண்ணீரை எடுத்து வேக, வேகமாக ஊற்றி தீயை அணைத்தனர். இதற்கிடையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவில் அதிகாரிகள், ஸ்ரீரங்கம் போலீசார் விரைந்து வந்தனர்.

பரிகார பூஜை

கடையில் பிடித்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தினர். மின் கசிவின் காரணமாக கடையில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த தீயில் பிரசாத கடையில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. இதற்கிடையில் பிரசாத கடையில் தீப்பிடித்த சம்பவத்தின் காரணமாக கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டது. தீ விபத்தில் சேதமான பொருட்களின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் கோவில் பிரசாத கடையில் தீப்பிடித்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. கடையை சீரமைத்த பின் பிரசாத விற்பனை ஓரிரு நாளில் தொடங்கும் என கோவில் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Next Story