கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மலேசியாவில் இருந்து கோவை வந்த கேரள வாலிபருக்கு தீவிர சிகிச்சை


கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மலேசியாவில் இருந்து கோவை வந்த கேரள வாலிபருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 10 March 2020 4:30 AM IST (Updated: 9 March 2020 10:38 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மலேசியாவில் இருந்து கோவை வந்த கேரள வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை,

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங் களில் மருத்துவக்குழுவினா் முகாமிட்டு வெளிநாட்டில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்து வருகிறார்கள். கோவை விமான நிலையத்திலும் மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பரிசோதனையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் அவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் அவர்களை வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், மலேசியாவில் வேலைபார்த்து வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 30 வயது வாலிபர், அங்கிருந்து விமானம் மூலம் கடந்த 7-ந்தேதி திருச்சிக்கு வந்தார். அங்கு அவரை மருத்துவக்குழுவினர் பரிசோதித்தனர். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது.

இதையடுத்து அவர் திருச்சூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று சிகிச்சை பெறுகிறேன் என்று கூறிவிட்டு, அங்கிருந்து பஸ் மூலம் கோவை வந்தார்.

ஆனால் அவர் ஊருக்கு செல்லாமல் கோவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் அதிகமாக இருந்ததால், நேற்று முன்தினம் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார்.

அவர் மலேசியாவில் இருந்து வந்ததாலும், தீராத காய்ச்சல், சளியுடன் இருமல் இருப்பதால் கொரோனா வைரஸ் அறிகுறியாக இருக்கலாம் என்று கருதிய டாக்டர்கள், அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததாலும், கொரோனா வைரஸ் அறிகுறி போன்று இருந்ததாலும், அவர் நேற்று காலை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அத்துடன் அவருடைய சளி மாதிரி, ரத்தம் ஆகியவை எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ஷார்ஜாவில் வேலை பார்த்து வந்த கோவையை சேர்ந்த 28 வயதான வாலிபர், விடுமுறைக்காக நேற்று அதிகாலை ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் அங்கு சென்று அவருடைய உடல் நிலையை பரிசோதனை செய்தனர். ஆனால் அவருக்கு சாதாரண காய்ச்சல் மட்டுமே இருப்பதும், கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை வெளியே நடமாட வேண்டாம் என்று சுகாதார குழுவினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு குளிர்பதன கிடங்கில் வங்காளதேசத்தை சேர்ந்த 32 வயதான வாலிபர் வேலை செய்து வருகிறார். அவருக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் சரியாகவில்லை. இதையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்கலாம் என்று பீதி ஏற்பட்டது.

இதையடுத்து அவருடைய சளி, ரத்தம் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருந்தபோதிலும் அவரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கி இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட 30 வயதான கேரள வாலிபர் தீவிர சிகிச்சையில் உள்ளாா். பரிசோதனை முடிவில்தான் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவரும். மேலும் அவர் தங்கி இருந்த ஓட்டலில் அவருக்கு வேலை செய்த 2 நபர், தனியார் ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த ஊழியர் என்று மொத்தம் 3 பேரை வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

ஷார்ஜாவில் இருந்து கோவை திரும்பிய வாலிபருக்கு காய்ச்சல் மட்டும்தான் இருக்கிறது. அதுபோன்று மேட்டுப்பாளையத்தில் வேலை செய்து வரும் வங்காளதேசத்தை சேர்ந்த வாலிபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. அவருக்கும் காய்ச்சல் இருக்கிறது. எனவே அவர்கள் இருவரையும் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 52 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை 28 நாட்கள் வெளியே நடமாட வேண்டாம் என்று அறிவுரை வழங்கி உள்ளோம். அத்துடன் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

கோவை விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புபவர்கள் கை கழுவுவது மிகவும் முக்கியம். அதுபோன்று ஆஸ்பத்திரி மற்றும் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்துவிட்டு செல்வது நல்லது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோவையில் பலர் முகக்கவசம் அணிந்தபடி நடமாடிவருகிறார்கள்.

Next Story