கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் கலெக்டர் ஷில்பா அறிவுரை


கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்  கலெக்டர் ஷில்பா அறிவுரை
x
தினத்தந்தி 10 March 2020 11:00 PM GMT (Updated: 10 March 2020 2:32 PM GMT)

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா கூறினார்.

விழிப்புணர்வு கூட்டம் 

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், ஆட்டோ டிரைவர் சங்கத்தினர், தனியார் ஆஸ்பத்திரி, பள்ளி மற்றும் கல்லூரி, சினிமா தியேட்டர் உரிமையாளர்கள், வர்த்தக சங்க பி£திநிதிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் கொரோனோ வைரஸ் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது கலெக்டர் ஷில்பா கூறியதாவது:–

அச்சப்பட தேவையில்லை 

கொரோனோ வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுத்தமாக கை கழுவுதல் முக்கியம் ஆகும். வெளியே சென்று விட்டு வீடு திரும்பும்போது கை, கால்களை சோப்பு மற்றும் லைசால் கொன்டு நன்றாக சுத்தம் செய்த பிறகுதான் வீட்டுக்குள் செல்ல வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து எளிதாக மற்றவர்களுக்கு அது பரவுதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, மக்கள் அதிகம் கூடும் இடங்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

பஸ், தியேட்டர்கள் 

குறிப்பாக பஸ்சில் பயணம் செய்யும்போது பொதுமக்கள் அமரும் இருக்கைகள், பிடிக்கும் கம்பிகளை சோப்பு, லைசால் போன்றவற்றை கொண்டு ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்ய வேண்டும். தியேட்டர்களில் ஒவ்வொரு காட்சி முடிந்த உடனேயே இருக்கைகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இருமல், தும்மல் காணப்பட்டால் அந்த பயணி இறங்கியவுடன் சுத்தம் செய்ய வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு சளி, இருமல் போன்றவற்றை முறையாக கையாள வேண்டும்.

யாருக்கேனும் இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் டாக்டர்களின் பரிந்துரை இன்றி மருந்தகங்களில் தாங்களாகவே மருந்து வாங்கி பயன்படுத்தக்கூடாது. மருந்தக உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு டாக்டரின் குறிப்பு இன்றி மருந்து வழங்கக்கூடாது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு 

காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டால் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து பொது இடங்களுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டில் இருந்து முழுமையாக குணமடைந்த பின்னர் வெளியில் செல்ல வேண்டும். அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு பள்ளி, கல்லூரி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு வந்து செல்வதால் தொடர்ச்சியாக சுத்தத்தை பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், ஐகிரவுண்டு அரசு மருந்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் துனை இயக்குனர் வரதராஜன், மாநகர நல அலுவலர் சதீஷ் குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story