ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து ஆகுமா? ஜாக்டோ–ஜியோ எதிர்பார்ப்பு
கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரில் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
நெல்லை,
கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரில் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.பால்ராஜ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
போராட்டம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கடந்த ஆண்டு ஜனவரி 21–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தியது.
பல்வேறு அரசு துறை ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் 5 லட்சம் ஆசிரியர்கள் உட்பட 12 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் போது பல ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இறுதியில் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் போராடியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை.
ரத்து ஆகுமா?
இதனால் ஆசிரியர்கள் ஓய்வு, பதவி உயர்வு மற்றும் இதர பலன்களை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் வருமென ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஜாக்டோ –ஜியோ போராட்டத்தில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பியவர்களில் மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறுதல்கள் மற்றும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 13 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேரும் என 17 ஆசிரியர்களும் 21 அரசு ஊழியர்களும் என மொத்தம் 38 பேர் கைது செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இவையெல்லாம் ஓராண்டுக்கு மேலாகியும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் பணி நிறைவு மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். முந்தைய ஆண்டுகளில் ஒருசில மாதங்களில் வழக்குகள் ரத்து செய்தது போல் இல்லாமல், ஓராண்டுக்கு மேலாகியும் போராடியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நிலுவையில் இருந்து வருகிறது.
இது குறித்து அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முதல்–அமைச்சரிடமும் நேரிடையாக கோரிக்கை வைத்துள்ளோம். நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் எதிர்பார்ப்பை தமிழக அரசும், தமிழக முதல்வரும் பூர்த்தி செய்வார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story