கோவை சிங்காநல்லூரில் டாக்டர் தம்பதி வீட்டில் நகை,பணம் திருடிய பெண் கைது
கோவை சிங்காநல்லூரில் உள்ள டாக்டர் தம்பதி வீட்டில் நகை, பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை சிங்காநல்லூர் கிருஷ்ணா காலனியை சேர்ந்தவர் அரவிந்த். இவருடைய மனைவி ரோஷினி. இவர்கள் 2 பேரும் டாக்டர்கள். இவர்கள், அந்த பகுதியில் கிளீனிக் நடத்தி வருகிறார்கள். இவர்கள் வீட்டில் பாப்பம்பட்டி பிரிவு செல்வராஜபுரத்தை சேர்ந்த மனோகரன் என்பவரின் மனைவி சாந்தி (வயது 40) வேலை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவிந்த் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.37 ஆயிரத்து 200-ஐ காணவில்லை. இது பற்றி சாந்தியிடம் கேட்ட போது அவர் சரியான பதில் அளிக்க வில்லை.
இது குறித்து அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்படாமல் நகை, பணம் திருட்டு போனது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார், டாக்டர் தம்பதி வீட்டில் வேலை பார்க்கும் சாந்தியிடம் விசாரித்தனர். அப்போது அவர், நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் சாந்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 பவுன் நகை மற்றும் ரூ.37 ஆயிரத்து 200-ஐ போலீசார் மீட்டனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story