ரூ.5 கோடியில் துப்பாக்கி சுடும் தளம் அமைக்க திட்டம்: திருச்சி ரைபிள் கிளப்பில் உறுப்பினர் சேர்க்கை போலீஸ் கமிஷனர் தகவல்


ரூ.5 கோடியில் துப்பாக்கி சுடும் தளம் அமைக்க திட்டம்: திருச்சி ரைபிள் கிளப்பில் உறுப்பினர் சேர்க்கை போலீஸ் கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 11 March 2020 5:30 AM IST (Updated: 10 March 2020 11:18 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி ரைபிள் கிளப்பில் ரூ.5 கோடியில் துப்பாக்கி சுடும் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கிளப்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.

திருச்சி,

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட பொதுமக்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் பயிற்சி பெற்று பல்வேறு துப்பாக்கி சுடும் போட்டிகளில் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பங்கேற்று பட்டங்களும், பதக்கங்களும் பெற விருப்பம் உள்ளவர்களுக்கு திருச்சியில் புதிதாக முதன் முறையாக ‘திருச்சி ரைபிள் கிளப்’ கடந்த மாதம் 12-ந் தேதியன்று திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கப்பட்டது. இந்த கிளப் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கடந்த மாதம் 24-ந் தேதியன்று பதிவு செய்யப்பட்டது.

இந்த கிளப் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு கொள்ளும் நபர்களுக்கும், துப்பாக்கியை தற்காப்புக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்பும் நபர்களுக்கும், துப்பாக்கி சுட கற்றுக்கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும் இந்த கிளப்பில் உறுப்பினர்களாகும் நபர்களுக்கு தேவையான துப்பாக்கி மற்றும் அதற்குண்டான தோட்டாக்கள் ஆகியவற்றை லாப நோக்கமின்றி குறைந்த விலையில் நல்ல தரமானவைகளாக வாங்கி கொடுக்கும்.

மேலும் பயிற்சி பெறும் நபர்களுக்கு தேவையான தோட்டாக்களை மிகவும் குறைந்த கட்டணத்தில் விளையாட்டு அரங்கத்தில் இந்த கிளப்பில் பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு தேவையான பல்வேறு ரக துப்பாக்கிகள் இந்த கிளப்பில் குறைந்த கட்டணத்தில் பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்படும்.

உறுப்பினர் சேர்க்கை

இந்த கிளப்பில் 3 விதமான உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் உரிய தொகையினை செலுத்தி ஆயுட்கால உறுப்பினராகலாம். ஆயுட்கால உறுப்பினர்களுக்கு பிறகு விருப்பம் இருப்பின் அவர்களது வாரிசுதாரர்களை ஆயுட்கால உறுப்பினராக்கி கொள்ளலாம். மேலும் தகுதியுள்ள மாணவ, மாணவிகள் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி உறுப்பினராக தலைவரின் ஒப்புதல்பேரில் நியமிக்கப்படுவார்கள்.

திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆகியோர் கிளப் சிறப்பான முறையில் நடைபெற உதவுவார்கள். நிர்வாக கமிட்டியில் 5 பேர் கொண்ட நபர்கள் இருப்பார்கள். அதில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் தலைவராகவும், திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) துணைத் தலைவராகவும், மீதமுள்ள நபர்கள் செயலாளர், துணை செயலாளர் மற்றும் பொருளாளராகவும் இருப்பார்கள்.

ரூ.5 கோடி செலவில்...

கிளப்பில் நவீன முறையில் சிறப்பு அம்சங்களுடன் கொண்ட துப்பாக்கி சுடும் தளம் அமைக்கப்பட உள்ளது. மேலும் உறுப்பினர்களுக்கு என்று சிறப்பு அரங்கங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. மேற்படி கிளப்பில் துப்பாக்கிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நவீன பெட்டக வசதியும் செய்யப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் தூரங்களில் உலக தரம் வாய்ந்த துப்பாக்கி சுடும் தளங்கள் அமைக்கப்படும். இதற்கு சுமார் ரூ.5 கோடி செலவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளுடன் நகரத்தின் மையப்பகுதியில் அமைய உள்ள இந்த கிளப்பில் விருப்பம் உள்ளவர்கள் உறுப்பினராவதற்கு உரிய சந்தா தொகையுடன் விண்ணப்ப படிவம் செலுத்தி உறுப்பினர் ஆகலாம்.

மேலும் மத்திய மண்டலத்தை சேர்ந்த திருச்சி, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆயுட்கால உறுப்பினராகலாம். பொதுமக்கள் இங்கு பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், பட்டங்களையும் பெறலாம். மேலும் விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களுக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் தொலைபேசி எண் 0431-2333704, 99429-88642 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story