அம்பத்தூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது


அம்பத்தூரில்  தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 March 2020 10:15 PM GMT (Updated: 2020-03-11T01:00:21+05:30)

அம்பத்தூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திரு.வி.க.நகர், 

சென்னை அம்பத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 65). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

அதேபோல் அம்பத்தூர் பானு நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (39). திருமண நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 5 பவுன் நகை மற்றும் ரூ.45 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்றனர்.

இந்த தொடர் திருட்டு தொடர்பாக அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த லெனின் ராஜ் என்பவர் தனது ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் திருட்டு போனதாக அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசுக்கு புகார் அளித்திருந்தார்.

வாலிபர் கைது

இதையடுத்து, போலீசார் இந்த 3 வழக்குகள் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அதில், திருவலங்காடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வேல்முருகன் (26) மற்றும் சத்யா ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிள் மற்றும் மேற்கண்ட 3 வீடுகளில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையில் தனிப்படை போலீசார் 2 பேரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று அதிகாலையில் கள்ளிக்குப்பம் சோதனைச்சாவடி அருகே வாகன சோதனை போது வேல்முருகன் பிடிபட்டார்.

போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சத்யாவை தேடி வருகின்றனர்.

Next Story