தர்மபுரி,கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி,கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 March 2020 11:00 PM GMT (Updated: 10 March 2020 8:24 PM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் முத்து தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டசெயலாளர் கிரைசாமேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் குமார், மாரிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 250 நாட்கள் வேலை வழங்க வேண்டும். இந்த திட்டத்தை நகர்ப்புற பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித்திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோஷங்கள்

கிராமப்புறங்களில் ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ் பணி நடக்கும் இடங்களில் குடிநீர் வசதி, மருத்துவ வசதி, நிழற்கூட வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். ஏரிகுளங்கள் மற்றும் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணி, குடிநீர்திட்ட பணிகளை ஊரக வேலை உறுதிதிட்டம் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் முருகன், எல்லப்பன், ராஜா, ஆறுமுகம் உள்பட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

கிரு‌‌ஷ்ணகிரி

கிரு‌‌ஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ. 287 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், 100 நாள் வேலையை மனு கொடுத்த அனைவருக்கும் உடனடியாக வழங்கவலியுறுத்தியும்ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு அகில இந்திய விவசாய தொழிற் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் எத்திராஜ், சுப்பிரமணி, மொளுகு, வேலு, ரத்தினம்மாள், வெங்கடாசலம், மனோகரன், சுரே‌‌ஷ்பாபு, இளையராணி, சிந்தாமணி, ருக்குமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலாமேரி, சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் பிரபாகரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.


Next Story