சாலை பணிக்கு ஜல்லி கற்கள் கொண்டு செல்ல அனுமதி மறுப்பு வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியல்


சாலை பணிக்கு ஜல்லி கற்கள் கொண்டு செல்ல அனுமதி மறுப்பு வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 10 March 2020 11:30 PM GMT (Updated: 10 March 2020 10:36 PM GMT)

தடிக்காரன்கோணத்தில் சாலை சீரமைப்பு பணிக்கு ஜல்லி கற்கள், பொக்லைன் எந்திரம் கொண்டு செல்ல அனுமதி மறுத்ததால் வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அழகியபாண்டியபுரம்,

குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாழைத்துவயல் பகுதியில் இருந்து புதுநகர் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க ஊரக உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.71 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி சாலையை சீரமைப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்தது.

நேற்று காலை 8.30 மணியளவில் ஒரு பொக்லைன் எந்திரமும், ஜல்லி கற்கள் ஏற்றிய ஒரு டெம்போவும் புறப்பட்டு சென்றன. தடிக்காரன்கோணம் சந்திப்பில் உள்ள வனத்துறையின் சோதனைச்சாவடியில் சென்ற போது அங்கு பணியில் இருந்த வனத்துறையினர் பொக்லைன் எந்திரத்தையும், டெம்போவையும் தடுத்து நிறுத்தினர்.

சாலை மறியல்

இதை அறிந்த தடிக்காரன்கோணம் பஞ்சாயத்து தலைவர் பிராங்கிளின் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சாலை சீரமைப்பு பணிக்காக பொக்லைன் எந்திரம் மற்றும் டெம்போவையும் செல்ல அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தடிக்காரன்கோணம்-கீரிப்பாறை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த உதவி வன அலுவலர் கானவாஸ், கீரிப்பாறை இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சாலை சீரமைப்பு பணிக்கு வாகனங்களை அனுமதிப்பதாக வனத்துறையினர் கூறினார். இதைதொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story