மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை; போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு


மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை; போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு
x
தினத்தந்தி 10 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-11T04:11:52+05:30)

மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்தனர்.

அனுப்பர்பாளையம், 

திருப்பூர் பி.என்.ரோடு பூலுவப்பட்டி நால் ரோட்டில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது. அங்கு 30-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் ஆட்டோ வைத்து ஓட்டிவருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த ஆட்டோ நிறுத்தத்தை சேர்ந்த டிரைவர்கள் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள 31 டிரைவர்களும் கடந்த 20 ஆண்டுகளாக சாதி, மத, கட்சி வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக ஆட்டோ ஓட்டி வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் குடிபோதையில் ஆட்டோ நிறுத்தத்துக்கு வந்து டிரைவர்களை தகாத வார்த்தைகளால் பேசினார்.

இதுகுறித்து அருகில் உள்ள சோதனைசாவடியில் இருந்த போலீசாரிடம் முறையிட்டோம். போலீசாரும் சீனிவாசனை அழைத்து எச்சரித்தனர். இந்த நிலையில் இரவு சீனிவாசன், அவருடைய அண்ணன் வெங்கடாசலம் மற்றும் அண்ணன் மகன் நித்தி ஆகியோர் ஆயுதங்களுடன் வந்து ஆட்டோ நிறுத்தத்தை காலி செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் ஆட்டோக்களை தீ வைத்து கொளுத்தி விடுவோம் என்றும் கொலைமிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story