வனப்பகுதியில் குடியேறிய கிராமத்தினர் - வத்திராயிருப்பு அருகே பரபரப்பு

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் வசித்து வந்த மக்கள் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த நெருக்கடியால் வனப்பகுதியில் குடியேறினர்.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பட்டுப்பூச்சி அருகே வினோபா நகர் பகுதி உள்ளது. இங்கு மலைவாழ் மக்களுக்காக அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. அதில் 20-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அதேபகுதியில் மற்றொரு தரப்பை சேர்ந்த மக்களும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்து மலைவாழ் மக்களுடன் தகராறு செய்து வருவதாகவும், அவர்களின் வீடுகளை அபகரித்து விட்டதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனை அடுத்து மலைவாழ்மக்கள் தங்களது குடும்பத்தினருடன் வெளியேறி கோவிலாறு அணைப்பகுதியில் மலையில் உள்ள வனப்பகுதியில் குடியேறி வசித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மலைவாழ்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் 15 நாட்களுக்குள் வீட்டினை சம்பந்தப்பட்ட மலைவாழ் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
விசாரணையின்போது வத்திராயிருப்பு தாசில்தார் ராம்தாஸ், ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் சரஸ்வதி, துணை தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைதொடர்ந்து வனப்பகுதியில் இருந்து மலைவாழ் மக்கள் தங்கள் வசித்து வந்த பகுதிக்கே மீண்டும் திரும்பினர். இதனால் வத்திராயிருப்பு பகுதியில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story