கூட்டுறவு சங்க தேர்தல் கோத்தகிரியில் அ.தி.மு.க.வினர் இடையே கோஷ்டி மோதல்
கோத்தகிரி கூட்டுறவு பண்டகசாலை சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ்நிலையம் அருகே உள்ள தலைமை கூட்டுறவு பண்டக சாலையில் கடந்த 6-ந் தேதி 11 நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 26 பேர் போட்டியிட்டனர். இதில் 11 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு ஆதரவாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இந்த பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட்டனர். இந்த தேர்தல் முடிந்த பிறகு தலைவராக சாந்தி ராமு அணியை சேர்ந்த வடிவேல் வெற்றி பெற்றதாகவும், துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட புத்திசந்திரன் அணியை சேர்ந்த பார்த்திபன் என்பவரது மனு உரிய முறையில் சமர்பிக்கப்படாததால் தள்ளுபடி செய்யப்பட்டு, அவருடன் போட்டியிட்ட மாதன் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலரும், கூட்டுறவு சார் பதிவாளருமான மது அறிவித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த பார்த்திபன் தேர்தல் அலுவலரிடம் எனது மனு எந்த காரணத்திற்காக தள்ளுபடி செய்யப்பட்டது என்பதற்கான காரணத்தை கூற வேண்டும் எனக்கூறி அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் கையில் வைத்திருந்த வேட்புமனு படிவத்தை பிடுங்கி கிழித்து எரிந்தார். இதைக்கண்ட எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் பார்த்திபனை தாக்கியுள்ளனர். உடனே அவரது ஆதரவாளர்களும் திருப்பி தாக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் கட்சி நிர்வாகிகளை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் பாதுகாப்பு கருதி அங்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனை தொடர்ந்து குன்னூர் எம்.எல்.ஏ. ஆதரவுடன் போட்டியிட்ட வடிவேல் தலைவராகவும், துணைத்தலைவராக மாதன் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இதுகுறித்த அறிவிப்பு அங்குள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
ஒரே கட்சியை சேர்ந்த இருதரப்பு ஆதரவாளர்களுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story