அந்தியூர் அருகே கொம்புதூக்கி அம்மன் கோவில் குண்டம் விழா - ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்


அந்தியூர் அருகே கொம்புதூக்கி அம்மன் கோவில் குண்டம் விழா - ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்
x
தினத்தந்தி 11 March 2020 9:30 PM GMT (Updated: 11 March 2020 7:31 PM GMT)

அந்தியூர் அருகே உள்ள கொம்புதூக்கி அம்மன் கோவில் குண்டம் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள நகலூர் பெருமாபாளையம் கரும்பாறை பகுதியில் அமைந்துள்ளது கொம்புதூக்கி அம்மன் கோவில். பர்கூர் வனப்பகுதியில் உள்ள இந்த கோவில் மாசி குண்டம் திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. பின்னர் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். அதன்பின்னர் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து குண்டம் இறங்குவதற்காக அம்மனிடம் வாக்கு கேட்கப்பட்டது. வாக்கு கிடைக்கப் பெற்றவுடன் பக்தர்கள் தீ மிதிப்பதற்கு தயாராக 20 அடி நீளத்திற்கு குண்டம் தயார் செய்யப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பூசாரி அக்னி அபிஷேகங்கள் செய்து முதலில் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் பிரம்பில் பூ சுற்றி கொண்டு ைகயில் வைத்துக்கொண்டு பயபக்தியுடன் குண்டம் இறங்கினர்.

பல பக்தர்கள் தங்களது கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டும் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை ெசலுத்தினார்கள். குண்டம் இறங்குபவர்களை அங்கு கூடியிருந்த பக்தர்கள் உற்சாகப்படுத்தினர். குண்டம் இறங்கிய உடன் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்தியூர், தவுட்டுப்பாளையம், அத்தாணி, ஆப்பக்கூடல், கீழ்வானி, மூங்கில்பட்டி, கோபி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழா நடைபெற கூடிய இடம் பர்கூர் வனப்பகுதி என்பதால் பர்கூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story