ஆத்தூரில் மூதாட்டியிடம் 11 பவுன் நகை அபேஸ் போலீஸ்காரர்கள் போல் நடித்து 2 பேர் துணிகரம்


ஆத்தூரில் மூதாட்டியிடம் 11 பவுன் நகை அபேஸ் போலீஸ்காரர்கள் போல் நடித்து 2 பேர் துணிகரம்
x
தினத்தந்தி 12 March 2020 5:45 AM IST (Updated: 12 March 2020 1:41 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் போலீஸ்காரர்கள் போல் நடித்து மூதாட்டியிடம் 11 பவுன் நகை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்திநகர் 60 அடி ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் மனைவி வசந்தா (வயது 63). இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே உள்ள காய்கறி கடைக்கு நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வசந்தா அருகில் வந்து நின்றனர். பின்னர் அவர்கள், நாங்கள் இருவரும் போலீஸ்காரர்கள், நீங்கள் கழுத்தில் இவ்வளவு நகை அணிந்து கொண்டு வெளியே வரக்கூடாது, அது பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் உள்ளது, எனவே இதை வாங்கி படியுங்கள் என்று கூறி 2 துண்டு பிரசுரங்களை வசந்தாவிடம் கொடுத்தனர்.

நகை அபேஸ்

அதை வாங்கி வசந்தா பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் ஒருவன், வசந்தாவிடம் நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை கழற்றுங்கள், உங்கள் வீட்டில் போய் அணிந்து கொள்ளுங்கள் எனக்கூறினான். இதை நம்பிய அவர் 11 பவுன் எடையுள்ள தங்க நகையை கழற்றி கொடுத்தார். அதை வாங்கிய ஒருவன் ஒரு தாளில் பொட்டலம் கட்டுவது போல் கட்டி அதை வசந்தாவிடம் திருப்பிக்கொடுத்தான். பின்னர் இருவரும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அதன்பின்னர் அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதில் நகை இல்லாததை அறிந்து வசந்தா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார். புகாரின்பேரில் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் போலீஸ்காரர்கள் போல் நடித்து துணிகரமான முறையில் மூதாட்டியிடம நகை அபேஸ் செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story