ஊத்துக்கோட்டையில் ரூ.5 கோடியில் வேளாண்மை சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணிகள் தொடக்கம் 8 மாதத்தில் முடிக்க திட்டம்


ஊத்துக்கோட்டையில்   ரூ.5 கோடியில் வேளாண்மை சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணிகள் தொடக்கம் 8 மாதத்தில் முடிக்க திட்டம்
x
தினத்தந்தி 11 March 2020 11:00 PM GMT (Updated: 2020-03-12T02:05:59+05:30)

ஊத்துக்கோட்டையில் ரூ.5 கோடி செலவில் வேளாண்மை விற்பனைத்துறை சார்பில் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 8 மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பண்ணை பகுதியில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் சேமிப்பு கிடங்கு உள்ளது. நெல் மற்றும் வேர்க்கடலை அறுவடை செய்து சேமித்து வைக்க இடவசதி இல்லாத விவசாயிகள் இங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடக்கிடங்கில் சேமித்து வைப்பர்.

இதற்காக அரசு சார்பில் விவசாயிகளிடம் கட்டணம் வசூல் செய்வதுண்டு. தேவைப்படும் போது விவசாயிகள் இங்கிருந்து விளைப்பொருட்களை எடுத்து செல்லலாம். சில விவசாயிகள் நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.19 வீதம் அரசுக்கு விற்பனை செய்வதுண்டு. இந்த நிலையில், சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த சேமிப்பு கிடங்கு இடிந்து விடும் நிலையில் உள்ளது.

ரூ.5 கோடியில் கட்டிடம்

மழை பெய்தால் மேற்க்கூரையில் ஓட்டைகள் காரணமாக நெல் மற்றும் வேர்க்்கடலை மூட்டைகள் பாழாகும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று தமிழக அரசு ரூ.5 கோடி நிதியை ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு 6 ஏக்கர் நிலப்பரப்பில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் திறன் கொண்ட கிடங்கு ஒன்றும், ஆயிரம் மெட்ரிக் டன் திறன் கொண்ட 2 கிடங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இங்கு சுற்றுச்சுவர், அலுவலகம், விவசாயிகள் ஓய்வு அறையும் கட்டப்பட உள்ளனர். இந்நிலையில் கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. 8 மாதத்தில் பணிகள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story