நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்து எடை குறையும் அவலம்


நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்து எடை குறையும் அவலம்
x
தினத்தந்தி 12 March 2020 5:15 AM IST (Updated: 12 March 2020 2:21 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பகுதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்து எடை குறைந்து வருகிறது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெல் அறுவடை முடிவடையும் தருவாயில் உள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை அந்தந்த பகுதிகளில் உள்ள நேரடி நெல்கொள் முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் அனுப்பி வைத்தனர். இதற்காக தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் போன்ற பகுதிகளில் 161 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன.

தேங்கும் நெல்மூட்டைகள்

விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் இருந்து நீலத்தநல்லூர், கொத்தங்குடி, சன்னாபுரம், புலியமங்கலம் ஆகிய சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நெல் சேமிப்பு கிடங்கில் இருந்து நெல் அரவைக்காக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது சேமிப்புகிடங்கிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு நெல்லை அரவைக்காக அனுப்பும் பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் நெல்மூட்டைகள் சேமிப்பு கிடங்கிலேயே தேங்கும் சூழ்நிலை உள்ளது. மேலும், இந்த சேமிப்பு கிடங்குகள் நிரம்பிய நிலையில், மூட்டைகளை அடுக்கி வைக்க போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் அந்தந்த கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

இதனால் நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்து அதன் எடை குறைந்து விடுகிறது. இதனால் எடை இழப்பு அபராத தொகையை பணியாளர்களே கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நெல்மூட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story