வெள்ளகோவிலில் நூல்மில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன்நகை திருட்டு - 4 ஆசாமிகள் கைவரிசை


வெள்ளகோவிலில் நூல்மில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன்நகை திருட்டு - 4 ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 12 March 2020 4:30 AM IST (Updated: 12 March 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவிலில் மில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடி சென்ற 4 ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வெள்ளகோவில், 

வெள்ளகோவில் கே.பி.சி. நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது48). நூல் மில் அதிபரான இவர் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோர் கோவையில் தங்கி உள்ளனர். கார்த்திகேயனுடன், அவருடைய தாயார் லட்சுமி (70) குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க கார்த்திகேயன் கோவைக்கு சென்று விட்டார். உடல் நலம் சரியில்லாததால், லட்சுமியும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலையில் கோவையில் இருந்து வெள்ளகோவிலுக்கு கார்த்திகேயன் வந்தார். பின்னர் வீட்டின் சுற்றுச்சுவர் இரும்பு கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றார். அப்போது வீட்டின் வராண்டாவில் பொருத்தப்பட்டு இருந்த மின்விளக்கு கழற்றப்பட்டு அருகில் இருந்த நாற்காலியில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்று பீரோவை பார்த்தார். அப்போது வீட்டின் அறையில் வைக்கப்பட்டு இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த துணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரம் மற்றும் 10 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளை ஆசாமி ஒருவர் தள்ளிக்கொண்டு வருவதும், அவருடன் மேலும் 3 பேர் வருவதும், பதிவாகி உள்ளது. எனவே 4 பேர் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

Next Story