மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்; 16–ந் தேதி நடக்கிறது


மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்;  16–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 12 March 2020 10:30 PM GMT (Updated: 12 March 2020 12:35 PM GMT)

திருவண்ணாமலை, செய்யாறில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் 16–ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் திங்கட்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்க வருகின்றனர்.

குறிப்பாக திருவண்ணாமலையில் இருந்து அதிக தொலைவில் உள்ள செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போக்குவரத்து செலவு, உணவு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளுக்காக சிரமப்படுகின்றனர். இந்த சிரமங்களை போக்குவதற்காக மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு முயற்சியாக மாதத்தில் 2 திங்கட்கிழமைகளில் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு ஆகிய 2 இடங்களிலும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

அதன்படி, 16–ந் தேதி (திங்கட்கிழமை) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் நடைபெறும்.

இந்த 2 இடங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் அளிக்கவும், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2 இடங்களில் அளிக்கப்படும் மனுக்களுக்கு ஒப்புதல் ரசீதுகள் அளிக்கப்பட்டு குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், இக்கூட்டங்களுக்கு அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் வருகை புரிவார்கள். எனவே, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

Next Story