அனைவரும் வருமான வரி செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்; இணை ஆணையர் பேச்சு

அனைவரும் வருமானவரி செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று வருமான வரித்துறை இணை ஆணையர் பேசினார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்ட வருமானவரித் துறை சார்பில் நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது. ஆடிட்டர் எஸ்.ரவிக்குமார் வரவேற்றார். வருமானவரித்துறை இணை ஆணையர் டி.வி.சுப்பாராவ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு ஆண்டு கணக்குகளுக்கும் அந்த வருடத்திற்குள் வருமான வரி கட்ட வேண்டும். 2019 -20 கடைசித் தவணை மார்ச் 15 -ந் தேதிக்குள் அனைவரும் செலுத்தி அபராத வட்டி தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ந் தேதிக்குள்ளும், மீண்டும் ஜூலை 31-ந் தேதிக்குள்ளும் செலுத்தி கணக்குதாக்கல் செய்து விடுங்கள். இதனால் வட்டி, அபராத வட்டி, தண்டனையை தவிர்க்கலாம். தற்போது வருமான வரி தாக்கல் செய்ய நேரில் வர வேண்டிய அவசியம் கிடையாது. ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.
வித்வாத் சிவிஷ்வாஸ் என்ற புதிய திட்டம் மூலம், மேல்முறையீடு செய்தவர்கள் வரும் 31-ந் தேதிக்குள் வருமான வரி செலுத்தினால் அவர்களுக்கு வட்டி, அபராத வட்டி, தண்டனை ஆகியவை ரத்து செய்யப்படும். அனைவரும் வருமான வரி செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வருமானவரி உதவி ஆணையாளர் ராஜேஷ், வருமான வரி அலுவலர் பூரான்சந்த் மீனா ஆகியோர் படக்காட்சி மூலம் வருமானவரித்துறை திட்டங்கள் குறித்து விளக்கினர். பொதுமக்கள், வணிகர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.
இதில் வியாபாரிகள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் கே.பரந்தாமன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story