பராமரிப்பு பணியை தனியாரிடம் வழங்கக்கூடாது என்று கோரி சாலைப்பணியாளர்கள் போராட்டம்
நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்கக்கூடாது என்று கோரி திருச்சியில் சாலைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன் வழங்க வேண்டும், சாலைப்பணியாளர்களுக்கு, தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.5,200, ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900 என நிர்ணயம் செய்து ஊதிய அந்தஸ்தை உயர்த்தி வழங்க வேண்டும், நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும், பணி நீக்க காலத்துடன் பணி காலத்திலும் இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சருக்கு உட்கோட்ட சங்கத்தின் சார்பில் கோட்ட பொறியாளர் மூலமாக கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது.
திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
நீதி கேட்டு நெடும் பயணம்
போராட்டத்தில் மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் இளங்கோவன், துணைத்தலைவர் சக்திவேல், பொருளாளர் சண்முகம், திருச்சி மாவட்ட அரசு ஊழியர் சங்க பொருளாளர் சுந்தர்ராஜன் மற்றும் ஏராளமான சாலைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோட்ட பொறியாளரை நிர்வாகிகள் சந்தித்து 16 தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், ‘நெடுஞ்சாலை பராமரிப்பு பணியினை தனியாருக்கு வழங்கக்கூடாது என்றும் சாலைப்பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜூன் 13-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நீதிகேட்டு நெடும் பயணம் மற்றும் இருசக்கர வாகனத்தில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்துவது என்றும், செப்டம்பர் 7-ந் தேதி சாலைப்பணியாளர்களின் பணி நீக்க நாளில் முதல்-அமைச்சரை சந்தித்து சாலைப்பணியாளர் குடும்ப பெண்கள், குழந்தைகள் கோரிக்கை மனுவை கொடுத்து முறையிடுவது என்றும் முடிவெடுத்துள்ளோம்’ என்றனர்.
Related Tags :
Next Story