குடும்ப தகராறில் கொடூரம்: 10 மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை


குடும்ப தகராறில் கொடூரம்: 10 மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை
x
தினத்தந்தி 13 March 2020 3:45 AM IST (Updated: 13 March 2020 12:07 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே குடும்ப தகராறில் 10 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

தேனி மாவட்டம், போடி ஜமீன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 28). இவருடைய மனைவி அழகுமணி (25). இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் கோடாங்கிபட்டியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. பின்னர், அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு நவீன் (4) என்ற மகனும், காவியா என்ற 10 மாத பெண் குழந்தையும் இருந்தனர். பன்னீர்செல்வத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மதுகுடித்து விட்டு அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். குடும்ப பிரச்சினையால் அழகுமணி நேற்று முன்தினம் தனது கணவருடன் கோபித்துக் கொண்டு, பெண் குழந்தையுடன் தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்நிலையில், நேற்று காலையில் பன்னீர்செல்வம் தனது மாமனார் வீட்டுக்கு வந்தார். அங்கு தனது மனைவியிடம் மீண்டும் தகராறு செய்தார். பின்னர், தனது குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறு கூறினார். அவருடைய மனைவி குழந்தையை கொடுக்க மறுத்த நிலையில், குழந்தையை அவரிடம் இருந்து பறித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

பிற்பகலில் கோடாங்கிபட்டியில் உள்ள தாமோதரன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்து கிணற்றுக்குள் ஒரு குழந்தையின் பிணம் மிதப்பதை சிலர் பார்த்தனர். இதை அறிந்த பொதுமக்கள் சென்று பார்த்த போது அது அழகுமணியின் பெண் குழந்தை என்று தெரியவந்தது. குழந்தையை அவருடைய தந்தை வாங்கிச் சென்ற நிலையில், செல்லும் வழியில் கிணற்றில் வீசி கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்தத பழனிசெட்டிபட்டி போலீசாரும், தீயணைப்பு படைவீரர்களும் விரைந்து சென்று கயிறு கட்டி குழந்தையின் உடலை மீட்டனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.

Next Story